இந்தியா- பாக். கைதிகள் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு: பாக். சிறையில் 633 இந்திய மீனவர்கள் உள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்திய மீனவர்கள் 633 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 2008ம் ஆண்டு முதல் இந்தியா- பாகிஸ்தான் இடையே போடப்பட்ட தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ம் ஆகிய  தேதிகளில், வருடத்தில் இருமுறை இருநாடுகளும் தங்கள் வசம் உள்ள கைதிகளின் பட்டியலை பரிமாற்றிக் கொள்வர். அந்த வகையில் இன்று பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய கைதிகள் பட்டியல் மற்றும் இந்தியா கைவசம் உள்ள பாகிஸ்தான் கைதிகள் பட்டியல் இஸ்லாமபாத்தில் உள்ள இந்திய தூதரகம் வழியாக மாற்றிக்கொள்ளப்பட்டது.

அதில், இந்தியாவில் 309 பாகிஸ்தான் கைதிகள் உள்ளனர் என்றும், இவர்களைத் தவிர 95 மீனவர்கள் கைதியாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், பாகிஸ்தானில் 633 இந்திய மீனவர்கள் உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  இந்தியர்கள், இந்திய மீனவர்கள், பாதுகாப்பு படை வீரர்களை அவர்களது உடைமைகளுடன் தண்டனை காலம் முடியும் முன்பே ஒப்படைக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும், தண்டனை முடிந்துள்ள 536 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டது.

இதைத்தவிர, பாகிஸ்தான் சிறையில் உள்ள, இந்தியர்கள் என நம்பப்படும் மக்கள் மற்றும் மீனவர்களின் நலனை கொரோனா காலத்தில் உறுதி செய்யுமாறு இந்திய அரசு தரப்பில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்கள் தொடர்பாக கேட்டபொழுது, சிறையில் இருப்பவர்கள் இந்தியர்கள் தானா? என உறுதியாக கூறமுடியவில்லை என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.        

Related Stories: