மாமல்லபுரம் அருகே சாலையோரமாக சாய்ந்துள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சாலையோரமாக சாய்ந்த நிலையில் ஒரு பட்டுப்போன மரம் அபாயகரமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்நேரமும் ஆபத்து விளையும் நிலை உள்ளது. இம்மரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலை வழியே நாள்தோறும் அரசு பேருந்து உள்பட ஏராளமான வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே எச்சூர காட்டுப் பகுதியை ஒட்டி சாலையோரத்தில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வகை மரங்கள் நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இந்நிலையில், எச்சூர் காட்டுப் பகுதிக்கு அருகே சாலையோரமாக சுமார் 60 அடி உயரமான மரம் பட்டுப்போய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இந்த மரம் லேசான காற்று அடித்தாலே சாலையோரம் மிகத் தாழ்வாக சாய்கிறது. இதனால் அந்த மரம் எந்நேரத்திலும் உடைந்து, மாமல்லபுரம்-செங்கல்பட்டு சாலையில் முறிந்து விழும் அபாயநிலை உள்ளது.

அந்த பட்டுப்போன மரம் சாலையோரமாக சாயும்போது, அதன் காய்ந்த மரக்கிளைகள் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகிறது. இதனால் அவ்வழியே வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அந்த பட்டுப்போன மரத்தை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, இச்சாலையை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, இந்த பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: