திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுப்பதற்கான வழிமுறையை எளிதாக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

உடுமலை: திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறும் முறையை  எளிதாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே  உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பரம்பிக்குளம் அணையில்  இருந்து காண்டூர் கால்வாய் மூலம் வரும் தண்ணீர், இந்த அணையில்  தேக்கப்படுகிறது. இதுதவிர, பாலாறு மூலமும் அணைக்கு நீர்வருகிறது.பிஏபி  பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையின் மூலம் சுமார் 3.77 லட்சம் ஏக்கர்  நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் அணையின் பின்பகுதியில் மணல்மேடாக காட்சி அளிக்கிறது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளம், அணை உள்ளிட்ட இடங்களில் வண்டல் மண்  எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், மீண்டும் அனுமதி  வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக,  திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, வண்டல் மண்  எடுக்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.  அதேநேரம், அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் சிரமத்தை ஏற்படுத்துவதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, திருமூர்த்தி அணை பகுதி விவசாயிகள் கூறியதாவது:வண்டல்  மண் எடுக்க அனுமதி அளித்த மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.  ஆனால், வண்டல் மண் எடுக்க மாவட்ட கலெக்டர் வேளாண்மை துறை, கனிம வளத்துறை  ஆகியவற்றில் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால்,  விவசாயிகளுக்கு அலைச்சல்தான் ஏற்படும். இதை தவிர்க்க வட்டாட்சியர் மற்றும்  கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மட்டும் அனுமதி வாங்கினால் போதும் என  அரசு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: