மணல், ஜல்லி ஏற்றிச்செல்லும் லாரிகள் தார்ப்பாயால் மூட வேண்டும்: கலெக்டர் ‘அட்வைஸ்’

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார்.கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், டி.ஆர்.ஒ.,லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: சாலை பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் விபத்து ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு விபத்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். திண்டுக்கல் - கரூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மணல், ஜல்லி ஏற்றிச்செல்லும் வாகனங்களில் இருந்து கல் தூசிகள் பறந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மணல், ஜல்லி ஏற்றிச்செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும். அனுமதியின்றி கனிம வளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து காவலர்கள் தெரிவிக்கும் சாலைகளில் செய்ய வேண்டிய சிறிய பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

கொடைக்கானல் பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை காவல்துறையின் மூலம் கூடுதல் ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினரை நியமித்து, வாகன நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் பல்வேறு முக்கிய இடங்களில் சென்டர்மீடியன் அமைக்க வேண்டும். என கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில், ஆர்.டி.ஓக்கள் பிரேம்குமார், சிவக்குமார், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: