ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே மாரியம்மன் கோயில் உண்டியலை தூக்கிச் சென்று உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தில் ஊரின் நடுவே உள்ளது மாரியம்மன் கோயில். இக்கோயிலில் இதுவரை பாதுகாவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை பூசாரி ஒருவர் மட்டுமே காலை, மாலை இருவேளை பூஜை செய்து வருகின்றார். பூசாரி நேற்று கோயிலை பூஜை செய்து விளக்கேற்றி வைத்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கோயிலில் முன்பக்கம் கேட்டை திறந்து பார்த்தபோது முன் பக்கத்தில் இருந்த சுமார் 5 அடி உயரமுள்ள சில்வர் உண்டியலை காணவில்லை.

அக்கம்பக்கத்தினர் கோயிலின் பின்பக்கம் பார்த்தபோது அங்கு கேட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் ஊரின் அருகே உள்ள பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது 3 கி.மீ. தூரமுள்ள இளமங்கலம் கிராமத்தின் அருகே வயல்வெளியில் உண்டியல் கிடந்தது.உண்டியலில் உள்ளே இருந்த காணிக்கை பணம் காணிக்கை நகை இருந்திருக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 10 ஆயிரம் மதிப்புள்ள பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 13ம் தேதி திருவிழா தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் கடந்த வருடம் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்பு உண்டியல் திறக்கப்படவில்லை.

ஆகையினால் 10 ஆயிரம் மற்றும் பக்தர்கள் கணக்கில் செலுத்தி இருக்கும் நகை கொள்ளை அடிக்கபட்டிருக்கலாம் எனவும் ஊர் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கோயிலில் கேமரா அமைக்கப்படாததும் உண்டியல் புதைக்கப்படாதது மட்டுமே காரணம் என போலீசார் தெரிவித்தனர். கோயில்களில் சிசிடிவி கேமரா வைக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories: