ஏலகிரி மலையில் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் கடத்தப்படும் கனிம வளங்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இது ஒரு சுற்றுலா தலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும், பொழுதுபோக்கிற்கும் 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் போன்றவை உள்ளன.

இது தவிர தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு ஒரு சென்ட் இடம் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யப்படுவதால் பல்வேறு தரப்பினரும் இடங்களை வாங்கிப்போட்டு இடத்தை பாதுகாத்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் வாங்கிய இடங்களில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களையும் சேர்த்து ஆக்கிரமித்து வருகின்றனர். ‘மேலும் இதுஒரு வளர்ந்து வரும் சுற்றுலாத்தலம் என்பதால் பல்வேறு தரப்பினரும் பல்வேறு புதிய கட்டிடங்களை கட்டுவதற்காக கல், மண் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகளவில் தேவை ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள பல்வேறு கிராமங்களில்  30க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வைத்துள்ளவர்கள் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு ஜேசிபி இயந்திரங்களையும் வைத்து பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இடங்களை சமன்படுத்துதல், புதிய கட்டிடங்கள் கட்டுதல், தனியார் ரிசார்டுகள் விடுதிகள் போன்றவர்களுக்கு மேடு, பள்ளங்களை சமன் செய்ய மண், கல் போன்றவைகள் அதிகளவில் தேவைப்படுவதால் வியாபார நோக்கில்  ஒருசில நபர்கள் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் சொந்த நிலத்திலும், அரசு புறம்போக்கு இடத்திலும் உள்ள கல், மண் போன்றவைகளை கடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் இது போன்ற செயலில் ஈடுபடுவதால் பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களின் சத்தத்தால் அப்பகுதி மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலங்களை சீரமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் ஏலகிரி மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு விவசாயிகள் மற்றும் வீட்டுமனை இடங்களை வாங்கும் நபர்கள் உள்ளிட்டோர் அவர்களது இடங்களை சமன் செய்யவும், சீர்படுத்தவும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி பெற்ற பின்னரே சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால் ஒரு சில நபர்கள் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக நிலத்தில் மண், கல் கடத்துதல் போன்றவற்றை வியாபார நோக்கில் விற்பனை வருகின்றனர். எனவே வனத்துறையினர் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருவாய் துறை, வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்

ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் வைத்துள்ள ஒரு சில நபர்கள், வியாபார நோக்கில் இரவு நேரங்களில் மண், கல் போன்றவற்றை கடத்தப்படுவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: