பெண்களுக்கு நிதி நிர்வாகமும் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

கோவிட் நெருக்கடியின் போது, பலரும் சம்பள குறைப்பு, வேலை இழப்பு என எதிர்பாராத பல நிதி நெருக்கடிகளை சந்தித்தனர். சரியான நிதி திட்டம் இல்லாததால், இந்த திடீர் மாற்றங்களை சந்திக்க முடியாமல் திணறிப் போயினர். இதற்கு முக்கிய காரணம் சரியான சேமிப்பும், முதலீடும் இல்லாததே. இன்று கை நிறைய சம்பாதிக்கும் பெண்களும், சம்பாதித்த பணத்தை எப்படி சேமிப்பது அல்லது முதலீடு செய்வது எனத் தெரியாமல், பொருளாதார திட்டங்களை தங்கள் கணவர் அல்லது தந்தையிடம் ஒப்படைத்து விடுகின்றனர். பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்றாலும், நிச்சயமாக பாதுகாப்பும், மன  நிம்மதியையும் வழங்க முடியும். பல பிரச்சனைகள் வரக் காரணமும், பல பிரச்சனைகளை தீர்ப்பதும் பணம்தான்.

இந்த  2021  புதிய வருடத்தில், நம் தோழிகள் யாரையும் சார்ந்திராமல், தமக்கும், தங்கள் குடும்பத்திற்கும் பொருத்தமான நிதி திட்டங்களை வகுக்க, நிதி ஆலோசகர் செளமியா ராமலிங்கம் சில முக்கிய குறிப்புகளை வழங்க முன்வந்துள்ளார். 2016ல் என்சைன் ஆலோசனை சேவை மையத்தை உருவாக்கி,  நிதித்துறையில் 20 வருடத்துக்கும் அதிகமான அனுபவத்துடன், பல மாணவர்களை நிதி ஆலோசகராக உருவாக்கி வருகிறார்.  இனி அவர் ஆலோசனைகள்…

இன்று பலரும் கிடைக்கும் வருமானத்தில் செலவழித்தது போக மீதியை சேமிக்கின்றனர். ஆனால், நாம் முதலில் சேமித்த பின்னரே செலவழிக்க வேண்டும். இன்று கொரோனாவில் நல்ல வேலையில் இருந்தும் பணத்தட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், இந்த தவறைதான் செய்துள்ளனர். எப்பொழுதும் குறைந்தது ஆறு மாதத்திற்கான சேமிப்பு இருக்க வேண்டும். அவசர காலங்களிலும், திடீர் வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியாது. ஆனால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மன தைரியத்தை சேமிப்புதான் கொடுக்கும்.

சேமிப்பிற்கான முதல் படி,  பட்ஜெட். பலரும் வருமானத்தை செலவு செய்துவிட்டு, அதை பட்ஜெட்டுக்குள் அடைக்க நினைக்கிறார்கள். ஆனால் பட்ஜெட்டை கணக்கிட்ட பின்னரே செலவும் சேமிப்பும் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் நிதி திட்டத்தை வகுக்க வேண்டும். வீட்டுச் செலவு - பத்தாயிரம் என பொதுவாக கணக்கிடக் கூடாது. மளிகை பொருட்கள், வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம் எனத் தனித்தனியாகச் செலவுகளைப் பிரித்து பணத்தை ஒதுக்க  வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக பட்டியலிடும் போது, அதில் நீங்கள் சேமிக்கும் ஆயிரம் ரூபாயும் பெரும் மாற்றத்தைக் கொடுக்கும்.

அடுத்ததாக வாழ்க்கையில் நீங்கள் அடைய நினைக்கும் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். எந்த வருடம் அந்த இலக்குகளை அடைய வேண்டும் - அடைய முடியும் என்பதையும் திட்டமிட வேண்டும். இந்த இலக்குகள் குழந்தைகளின் படிப்பு செலவிலிருந்து, ஹோம் தியேட்டர், கார் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இலக்குகளைப் பட்டியலிடும் போதுதான், நமக்கு முக்கியான தேவைகள் என்ன என்பது புரியும். பின், அந்த தேவைகளை முதன்மைப்படுத்தி, அதற்கான சேமிப்பை முதலில் தொடங்கலாம். இது தவிர, நீண்ட கால இலக்குகளுக்கான சேமிப்பை, எதிர்காலத்தில் நீங்கள் சம்பாதிக்கப் போகும் வருமானத்தையும் கணக்கில் கொண்டு முதலீடு திட்டங்களை உருவாக்கலாம்.

காப்பீடு திட்டங்கள், எந்தளவு முக்கியமோ, அதே போலத் தவறான காப்பீடு திட்டம் மூலம் நம் சேமிப்பையே இழக்கவும் நேரிடலாம். காப்பீடு இருக்கும் நம்பிக்கையில் பலர், முதலீடு செய்வதில்லை. தவறான காப்பீடு ஓய்வுக் காலத்தில், மிகச் சிறிய தொகையையே திரும்பித் தரும். எந்த நன்மையும் இருக்காது. 25,000 சம்பாதிக்கும் ஒருவர், 8000க்கு ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டியதில்லை. உங்கள் வருமானத்தில் 5% வரை காப்பீடு திட்டங்களில் செலுத்தலாம்.   

வெறும் சேமிப்பு நமக்கு பெரும் லாபத்தைத் தராது. சேமிப்பு என்றுமே முதலீடு ஆகாது. பணத்தைச் செயலற்று வங்கியிலும் வீட்டிலும் வைத்திருப்பதால், எதிர்காலத்தில் அதற்குப் பெரிய பயன் இருக்காது. அதே சமயம், எதில் முதலீடு செய்வது எனத் தெரியாமல் தவறான முதலீடுகளில் பணத்தை இழப்பதைவிட அதை வங்கியில் சேமிப்பதே சிறந்தது. முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இன்று பல வாய்ப்புகள் உள்ளன. நிதி ஆலோசகர்களின் உதவியுடன் முதலீட்டைத் தொடங்கலாம்.

இளம் வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பிக்கும் போது, அதற்கான முழுமையான பயனை, முதிய காலத்தில் பெற முடியும். மேலும், வயது உங்கள் வசம் இருப்பதால், சில இழப்பீடுகள் சந்தித்தாலும், அதைச் சமாளித்து வந்து அனுபவத்துடன் பெரிய தொகையை முதலீடு செய்து லாபம் பெரும் வாய்ப்பும் அதிகம் இருக்கும். 80 சி பிரிவில் வரி விலக்கு கிடைக்கும் நிதி திட்டங்களையும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.  எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர சேமிப்பு, மல்டி கேப் ஃபண்ட் பங்கு நிதிகள் மற்றும் வருங்கால வைப்பு நிதிகள் என, தேவைக்கும்-எதிர்காலத்திற்கும் ஏற்ற ஒரு முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

இன்று 26-30 வயதில் திருமணமாகி, 50 - 55 வயது வரை தங்கள் குழந்தைகளின் மேற்படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும், வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த கடமைகளை முடித்து ஓய்வுக் காலத்திற்குத் தேவையாகத் தொகையை  மீட்டுவதற்குள் பணிக் காலம் முடிந்துவிடும்.  இந்தியாவில் சுமார் 90% மக்கள் ஓய்வூதிய காலத்திற்கு திட்டமிடுவதில்லை. இதில் தலைமுறை தலைமுறையாகச் செல்வந்தர்களாக இருப்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் பலரும் இன்று  ஓய்வு பெற்ற பின்பும் உழைக்கும் சூழ்நிலைதான் நிலவுகிறது. இதனால் வயதானதும், மருத்துவச் செலவு உட்பட அத்தியாவசிய செலவுகளையும் கணக்கிட்டு இளம் வயதிலேயே ரிடையர்மெண்ட் காலத்திற்குத் திட்டமிடுங்கள்.

இந்திய மக்களின் முக்கிய கனவு சொந்தமாக வீடு வாங்குவதுதான். அப்படி வாங்கிய வீட்டை தங்கள் மகன்/மகளுக்குக் கொடுப்பதைதான் பல பெற்றோர்கள் விரும்புவர். ஆனால், மாதாந்திர வருமானம் இல்லாமல், குழந்தைகளிடமிருந்து நிதி உதவி இல்லாத/விரும்பாத மூத்த குடிமக்கள் Reverse Mortgage என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் உயிர்வாழும் வரை யாரையும் நம்பி இருக்க வேண்டாம். பொதுவாக வீடு வாங்க, கடன் பெற்று அதற்கு மாதாமாதம் வட்டி கட்டுவது வழக்கம்.

இந்த ரிவர்ஸ் மார்ட்கேஜில், வங்கி நமக்கு மாதாமாதம் பணம் வழங்கும். இது 60 வயதைக் கடந்தவர்களுக்கான சிறப்புத் திட்டமாகும். இதன் மூலம், வாழ்நாள் முழுவதும் வங்கியிடமிருந்து மாதம் ஒரு தொகை கிடைத்துவிடும். இறந்தப் பின், வீடு வங்கிக்கு சொந்தமாகும். வாரிசுகள் வீட்டை மீட்க நினைத்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்தி, வீட்டை மீட்க முடியும்.

இன்று சம்பாதிக்க பல வழிகளை கற்றுத்தரும் கல்லூரிகளும் பயிற்சி நிறுவனங்களும், சம்பாதித்த பணத்தை முறையாக எப்படி சேமித்து முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறுவதில்லை. இதனால், வேலை கிடைத்து திடீரென வரும் பணத்தை எப்படி சேமிப்பது எனத் தெரியாமல் உபயோகமற்ற பொருட்களுக்காக செலவு செய்துவிடுகின்றனர். அதுதவிர, க்ரெடிட் கார்டுகள், இ.எம்.ஐகள் எனவும் கடன் வாங்கி ஷாப்பிங் செய்வது வழக்கமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து ஐம்பது ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளை, பணம் இல்லாத நேரத்தில் எண்பது ரூபாய்க்கு வாங்குகின்றனர். க்ரெடிட் கார்டுகளை முறையாக எப்படி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து உபயோகிப்பது அவசியம்.

கல்லூரிகள் நிதி திட்டத்தை கற்றுத்தரும் பாடங்களை நிச்சயம் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். நிறுவனங்களும், கல்லூரி முடித்து புதிதாக சேரும் ஊழியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம். இளம் வயதிலேயே அவர்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்துடன், முதலீடு பற்றிய புரிதல்களையும் வழங்க முடியும்’’ என்று ஆலோசனை வழங்கினார் நிதி ஆலோசகர் செளமியா ராமலிங்கம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: