அரிமளம் அருகே புதுநிலைபட்டியில் குதிரை, மாட்டு வண்டி எல்லை பந்தயம்

திருமயம்: அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள புதுநிலைபட்டி கண்ணுடைய ஐயனார், குறுந்துடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று 8ம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

மாட்டுவண்டி பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு சிறிய மாடு என மூன்று பிரிவாக நடைபெற்றது.இதில் மொத்தம் 50 ஜோடி மாடுகள், 7 குதிரைகள் கலந்து கொண்டன. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசு புதுநிலைபட்டி பெரியசாமி, 2ம் பரிசு வாழ்றமாணிக்கம் சண்முகம், 3ம் பரிசு கே.புதுப்பட்டி கவுசல்யா, 4ம் அம்மன் பேட்டை செல்வம் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசு மேல்நிலைப்பட்டி சபரிமாறன், 2ம் பரிசு ரத்தினகோட்டை அடைக்கலம் காத்த அய்யனார், 3ம் பரிசு அறந்தாங்கி ஜெயபால், 4ம் பரிசு பட்டங்காடு துளசிராமன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயமானது 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு தேனி கன்னிசேர்வாரம்பட்டி தனுசுகா, பூக்கொள்ளை ரித்தீஷ், 2ம் பரிசு நாட்டானி சூர்யா, கே.புதுப்பட்டி கௌசல்யா, 3ம் பரிசு மஞ்சள்கரை பிரபா, புதுநிலைப்பட்டி சத்யா செல்வராஜ், 4ம் பரிசு பரமந்தூர் குமார், செல்வனேந்தல் சுந்தர்ராஜன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றனர். இறுதியாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் ஏழு குதிரைகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசு பேராவூரணி ருத்ரா அப்பாஸ், 2ம் பரிசு திருச்சி உறையூர் மீண்டும் தேவர் வம்சம், 3ம் பரிசு கரூர் பாரத், 4ம் பரிசு திருச்சி உறையூர் தம்பி உதயசூரியன் ஆகியோருக்கு சொந்தமான குதிரைகள் வென்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரை, மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற புதுநிலைப்பட்டி அறந்தாங்கி சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புதுநிலைப்பட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். கே புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: