பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் என்ன பிரச்னை உள்ளது...தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு பள்ளிகளில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நேற்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்றைக்கு அதை ஒத்திவைத்தது.

இந்திநிலையில் இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது என கேள்வி எழுப்பியது. மேலும் ஆசியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கு வேறுபாடு உள்ளது.

முறையற்ற தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் தகுதியற்ற நபர்கள் பணிநியமனம் செய்யப்பட்ட வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்கள் நலன் சார்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் இல்லை; அரசின் பதிலும் திருப்தியில்லை என்று உயர்நிதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை ஜூலை 8-க்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: