திருவனந்தபுரத்தில் பரபரப்பு : மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.கோபாலன் மையத்தின் வாயிலுக்கு அருகே நேற்று இரவு 11.30 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த திருவனந்தபுரம் மாநகராட்சி காவல் ஆணையர், குண்டுவீச்சு தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிபிஎம் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிச் செல்வது பதிவாகி உள்ளது. வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தகவல் அறிந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி அலுவலகத்தின் முன்பு கூடினர். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கட்சியின் மூத்த தலைவர்கள், ஏ.கே.கோபாலன் மையத்தில் நடைபெற்ற இந்த குண்டு வீச்சு தொடர்பாக கட்சியினர் வேதனையில் உள்ளனர். மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

இதன் பின்னணியில் உள்ளவர்களை தகுந்த ஆதாரத்தை பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கலவரத்தை தூண்டிவிட முயல்வதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கங்களை கண்டறிந்து தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், காங்கிரசின் தந்திரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தொண்டர்களை கொடியேறி பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.   

Related Stories: