பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறையினர் அதிரடி..!!

சென்னை: பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை தியாகராயர் நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் பெயரில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கியுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களுக்கு சம்பந்தப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட இடத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் மூலம் பல கோடி ரூபாய் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பல கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் சுமார் 4,430 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரூ.4,500 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வாங்கி குவித்திருப்பதாகவும், நிலங்களாக மாற்றி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பினாமி தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 வருடமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலா பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்களை முடக்கும் பணியில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துக்களையும், அடுத்த நடவடிக்கையாக ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் முடக்கினர். மேலும் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறுதாவூர் பங்களா சொத்துக்களையும் அதிகாரிகள் முடக்கினர். இந்நிலையில், பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். இதுவரை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சுமார் ரூ.4,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து சொத்துக்கள் முடக்கம் செய்துள்ளனர்.

Related Stories: