தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வால் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டதை தனித்த ஒன்றாக பார்க்க கூடாது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற்றால் தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாட்டில் இருந்து அனைத்து கட்சி குழு டெல்லிக்கு செல்ல வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்காததால் மீண்டும் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன், ‘சாதிக்க முடியவில்லை’ என தனது பெற்றோருக்கு உருக்கமான வீடியோ ஒன்று பதிவு செய்து விட்டு வீட்டில் தனது பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், என்னால் படிக்க முடியும், ஜெயிக்க முடியும் என நினைத்து கொண்டிருந்தேன்.

ஆனால் என்னால் எதிலையும் ஜெயிக்கவும் முடியவில்லை. சாதிக்கவும் முடியவில்லை. என்னால் முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு என்ன வரும் என்று தெரியாமல் எனக்குள் ஒரு பொய்யான அறிவை வளர்த்துக்கொண்டேன். அதுதான் என் தவறு. என் எதிர்காலத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்பது கூட தெரியாத ஆளாக நிற்கிறேன். என் மூளை குழம்பி போய் மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்று கூறியிருந்தார்.

Related Stories: