இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் 12ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்படும்

சென்னை: இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வரும் 12ம் தேதி சென்னைக்கு விமானத்தில் தனி இருக்கையில் வைத்து கொண்டு வரப்படுகிறது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்திய ஜனாதிபதி தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் திரெபதி முர்மு, எதிர்க்கட்சிகள் கூட்டணி யஷ்வந்த சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் இதற்கான தேர்தல்கள் அந்தெந்த மாநிலத்தில் உள்ள சட்டபேரவையிலும், அதைப்போன்று டெல்லியில் பாராளுமன்றத்தில் நடைபெறும்.

மேலும் இது குறித்து சட்டபேரவை உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்கு அளிக்கும் வகையில் ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. இதற்கான வாக்குப்பெட்டிகள் வரும் 12ம் தேதி தமிழக அதிகாரிகள் டெல்லி சென்று  விமானத்தில் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு கொண்டு வரப்படும். ஒவ்வொரு எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கும் அந்தெந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்குகள் கணக்கிடப்படும்.

அதன்படி தமிழகத்தில் ஒரு எம்எல்ஏக்களுக்கு 176 வாக்குகளாகவும், எம்பிக்களுக்கு 700 வாக்குகளாகவும் கணக்கிடப்படும். தமிழகத்தில் 39 மக்களவை, 18 மாநிலங்களை எம்பிக்கள், 234 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதியுடைவர்கள். அதன்படி 41,184 எம்எல்ஏக்களின் வாக்குகளும், 39,900 எம்பிக்களின் வாக்குகளும் உள்ளது. அதைப்போன்று நாடு முழுவதும் எம்எல்ஏ, எம்பிக்கள் என 4,809 பேர் வாக்களிக்கவுள்ளனர். அதன்படி 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: