ஆன்லைனில் வாங்குபவர்களே உஷார்...! சேலை விலை ரூ.799; இழந்தது ரூ.1 லட்சம்; ராமநாதபுரம் ஆசிரியையிடம் நூதன மோசடி

ராமநாதபுரம்: ஆன்லைன் மூலம் சேலை வாங்கி ரூ.1 லட்சம் இழந்த பெண் அளித்த புகார் குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம், வெளிபட்டினத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி செல்வி (35). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த ஜூன் 19ல் ஆன்லைனில் ரூ.799க்கு சேலை விற்பனை விளம்பரத்தை பார்த்து ஆர்டர் செய்தார்.

சேலை கூரியர் சேவை மூலம் ஜூன் 25ல் வந்தது.

சேலை கிழிந்திருந்ததால், இணையதளம் சென்று அதிலுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கூறினார். இதையடுத்து அந்த நபர் தெரிவித்த ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்த செல்வி, 2 வங்கிக்கணக்குகளின் விபரங்கள் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்தார். பின் அந்த நபர், செல்வியின் வங்கிக்கணக்கிற்கு பணம் திரும்ப அனுப்பப்படும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

சிறிது நேரத்தில் செல்வியின் 2 வங்கி கணக்கிலிருந்து  ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 எடுத்த விபரம் தெரிந்தது. மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தருமாறு ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: