இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் இன்று தொடக்கம்; தொடரை கைப்பற்றி சாதிக்க இந்தியா உத்வேகம்

பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5வது டெஸ்டில் விளையாட உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இரு அணிகளிலுமே ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கோஹ்லி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால், ரோகித் தலைமையில் இந்தியா புதிய பயணத்தை தொடங்கி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பர்மிங்காம் டெஸ்டில் களமிறங்குவது கேள்விக்குறியான நிலையில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். இந்தியா 2-1 என முன்னிலை வகிப்பதால், இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி சாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-08ல் நடந்த தொடரில் (3 போட்டி)டிராவிட், கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 1-0 என வென்றிருந்தது.

அதன் பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வீழ்த்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ரோகித் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால், ஷுப்மன் கில்லுடன் இணைந்து மயாங்க் அகர்வால் அல்லது ஹனுமா விஹாரி இன்னிங்சை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டிசம்பரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட செதேஷ்வர் புஜாரா, கவுன்டி கிரிக்கெட்டில் அமர்க்களமாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். சசெக்ஸ் அணிக்காக அவர் விளையாடிய 7 இன்னிங்சில் அவர் 2 இரட்டை சதம் மற்றும் 170*, 109 என விளாசித் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

புஜாரா தனது சூப்பர் பார்மை தொடர்வார் என இந்திய அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே சமயம், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் கோஹ்லி, கணிசமாக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். இங்கிலாந்து அனுபவ வேகம் ஆண்டர்சனின் சவாலை கோஹ்லி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும், இந்த டெஸ்டின் சுவாரசியமான அம்சங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியை அவர் 7 முறை அவுட்டாக்கி உள்ளதே அதற்கு காரணம்.

ஷ்ரேயாஸ், ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், ஷர்துல் என இந்திய பேட்டிங் வரிசை வால் வரை வலுவாக நீடிப்பதும் சாதகமான அம்சம். வேகத்துக்கு ஷமி, பும்ரா, சிராஜ் கூட்டணியும் நம்பிக்கை அளிக்கிறது. இங்கிலாந்து அணியும் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருவதால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது. கேப்டன் பொறுப்பின் சுமை இல்லாததால் ஜோ ரூட்டின் பேட்டிங்கில் கூடுதல் உறுதியைக் காண முடிகிறது.

இது இந்திய அணிக்கு சற்று கவலை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் பேர்ஸ்டோ, கிராவ்லி, லீஸ், போக்ஸ் என இங்கிலாந்து பேட்டிங் வரிசையும் பலமாகவே காணப்படுகிறது. பாட்ஸ், லீச், பிராடு, ஆண்டர்சன் வேகம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடும். தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்க இந்தியாவும், டிரா செய்ய இங்கிலாந்து அணியும் வரிந்துகட்டுவதால், எட்ஜ்பாஸ்டனில் எட்ஜ் ஆப் த சீட் த்ரில்லர் நிச்சயம். மொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது என்றால் மிகையல்ல.

Related Stories: