சென்னையில் செப். 12ம் தேதி தொடக்கம்; சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் செப்டம்பர்  12ம் தேதி தொடங்குகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான  பத்திரிகையாளர்  சந்திப்பு  நேற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அபூர்வா, துறை சார்ந்த செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காணொலி வாயிலாக பங்கேற்று  அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ‘‘நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் 2022 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்தி முடிக்கப்படும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உலக டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு நன்றி’’ என்றார்.  இதை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் பேசுகையில், ‘‘இந்தியாவின் முதல் தரத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச கால அட்டவணைகள் பொறுத்து, தமிழ்நாட்டில் ஆடவருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மீண்டும் அடுத்த வருடம் நடத்த திட்டமிடப்படும்’’ என்றார்.

Related Stories: