அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மாற்றாக, அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அங்கீகாரம், எஸ்பிஐ வங்கிக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மூலமாக 21வது கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனையை ஜூலை 1 (இன்று) முதல் ஜூலை 10 வரையில், அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தொடங்குவதற்கும், இந்த பத்திரங்களை பணமாக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை உட்பட 14 கிளைகளில் பத்திரங்கள் விற்பனை நடக்கும். இந்த பத்திரம் வாங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்கு மட்டுமே  செல்லுபடியாகும். அதற்கு பிறகு டெபாசிட் செய்யும் எந்த கட்சிகளுக்கும் பணம் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: