ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முர்மு, சின்கா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. 107 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களமிறக்கப்பட்டு இருக்கிறார். முர்மு கடந்த வாரம் வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில், யஷ்வந்த் சின்கா கடந்த 25ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர்களை தவிர மேலும் 113 பேர் வேட்புமனு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு நேற்று முன்தினம் கடைசி நாளாகும். இதில், ஆரம்பக் கட்டத்திலேயே பலரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. இது குறித்து மாநிலங்களவை செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான பி.சி.மோடி கூறுகையில், ‘‘ஜனாதிபதி  தேர்தலுக்கு 94 பேர்களின் சார்பில் மொத்தம் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்  107 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா சார்பில் தலா நான்கு தொகுப்புகள் அடங்கிய மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. இவை அனைத்து தகுதிகளையும் கொண்டிருப்பதால், அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 2ம் தேதி (நாளை) கடைசி நாள். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்,’’ என்றார்.

Related Stories: