ஹார்மோன் பிரச்னையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்

சென்னை: தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’, சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படம், பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படம் தனது கைவசம் வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழில் டீகே இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், ஹார்மோன் பிரச்னையால் தன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ‘கடந்த சில நாட்களாக எனக்கு ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியிலான இந்த பாதிப்பு பொதுவாகவே உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். முகம் மற்றும் உடல் பகுதிகளில் முடி அதிகமாக வளர்வது மற்றும் உடல் எடை கூடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். தவிர, வேறு சில தீராத உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘இதுபோன்ற சில பிரச்னைகளை எதிர்த்துப் போராட வேண்டிய ஒன்றாக நினைக்காமல், இயற்கையான நிகழ்வு என்று ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன்.

அதை எனது உடல் ஏற்றுக்கொண்டு, பிறகு அதற்கேற்ப சிறந்தமுறையில் செயல்படுகிறது. சரியான உணவு, நன்றாக தூங்குதல், எனக்கான பணிகளை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வது ஆகியவற்றுக்காக நான் நன்றி சொல்கிறேன். எனது உடல் தற்போது சரியாக இல்லை என்றாலும், இதயம் சீராக இயங்குகிறது. நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதனால், மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகமாகப் பாய்கின்றன. இ்ந்த சவால்கள் எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியது. எனவேதான் இந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்’ என்றார்.

Related Stories: