குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கத்தில் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரவேண்டும்: வராண்டாவில் பாடம் நடத்தும் அவலம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் உயர்நிலை பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், கூடுதல் கட்டிடம் கட்டித் தரக்கோரி எம்எல்ஏவிடம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, மாடம்பாக்கம், குத்தனூர், தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சி வரதராஜபுரத்தில் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை, கடந்த 2020ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு, தற்போது 891 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், 15 வகுப்பறைக்கு பதில் 7 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதில், ஒரு கணி அறை, ஒரு ஆய்வக அறை, ஒரு நூலக அறை உள்ளது. இதில், நூலக அறையில் 2 வகுப்புகளும், ஆய்வக அறையில் 2 வகுப்புகளும் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.  மீதி உள்ள 4 வகுப்பறையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வராண்டாவில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, மாடம்பாக்கத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகையிடம், மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், தற்போது அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதில், கூடுதல் வகுப்பறைகள் அமைத்து கொடுத்தால் மாணவர்களின் வருகையும் அதிகரிக்கும். எனவே, போதிய வகுப்பறை வசதி இல்லாததால் ஏராளமான மாணவ, மாணவிகள் தொலைவில் உள்ள கூடுவாஞ்சேரி சென்று படித்து வருகின்றனர்.  மேலும், மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்களை வராண்டாவில் தங்க வைத்து படிக்க வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: