குணகரம்பாக்கத்தில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ஸ்ரீபெரும்புதூர்: குணகரம்பாக்கம் கிராமத்தில் பட்டா மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (45). இவர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குணகரம்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சுங்குவார்சத்திரம் அருகே மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தினேசுக்கு குணகரம்பாக்கத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய, குணகரம்பாக்கம் விஏஓ உதயகுமாரிடம் சென்றுள்ளார். அப்போது, பட்டா மாற்றம் செய்ய உதயகுமார் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.6 ஆயிரம் தருவதாக தினேஷ் ஒப்புக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தினேஷ், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தினேஷிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். நேற்று மதியம் ரசாயனம் தடவிய நோட்டுகளை வீஏஓ உதயகுமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் விஏஓ உதயகுமாரை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: