மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓஎம்ஆரில் சாலை தடுப்பு பணி தீவிரம்

திருப்போரூர்: மாமல்லபுரத்தில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ஒஎம்ஆர் சாலையில் சாலைத்தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தில் இம்மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலை ஆகியவற்றை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சாலை சேதமடைந்த இடங்களில் அவற்றை அகற்றி விட்டு புதிய சாலை அமைத்தல், சாலையோரங்களில் பூங்கா அமைத்தல், பேருந்துகள் நிறுத்த இடம் ஒதுக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஓஎம்ஆர் சாலையில் அதன் நடுவே 3 அடி உயர சாலைத்தடுப்பு அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் வரை முதற்கட்டமாக இப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இருந்த தரை மட்ட அளவிலான சாலைத்தடுப்பு அகற்றப்பட்டு சாலையின் நடுவே மரக்கன்றுகள், மின் விளக்குகள், கேமரா பொருத்தும் கம்பம் ஆகியவற்றை அமைக்கும் வகையில் கான்கிரீட் சாலைத்தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்ததும். இந்த தடுப்பின் நடுவே மண் கொட்டப்பட்டு அவற்றில் அழகிய செடிகள் நட்டு பராமரிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: