நீட் தேர்வில் வென்றும் சீட் இல்லாததால் விபரீதம் சென்னையில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை: பெற்றோருக்கு உருக்கமான வீடியோ பதிவு

சென்னை: 2021ம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்காததால் மீண்டும் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன், தனது பெற்றோருக்கு உருக்கமான வீடியோ ஒன்று பதிவு செய்து விட்டு வீட்டில் தனது பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை சூளைமேடு டாக்டர் சுப்புராவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (42), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கரன்ராஜ் மற்றும் தனுஷ் (18. இளைய மகன் தனுஷ் எம்எம்டிஏ அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 2020ல் பிளஸ் 2 முடித்தார். பிளஸ்2வில் 600க்கு 489 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்று பிளஸ் 2 படிக்கும் போதை நீட் தேர்வுக்கு தனுஷ் படித்து வந்தார்.

அதன்படி கடந்த 2021ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் 159 மதிப்பெண் பெற்று வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. ஏழ்மையான குடும்பம் என்பதால் பணம் இல்லாததால் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. தனுஷின் தாய் ஜெயந்தி வீட்டு வேலைக்கு சென்று தனது மகனை நீட் தேர்வுக்கு படிக்க வைத்திருந்தார்.

இதையடுத்து தனுஷ் 2022ம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு, கடந்த 10 மாதங்களாக வீடிலேயே கடுமையாக படித்தார்.  

வழக்கம் போல் நேற்று முனதினம் வேலை முடிந்து ஜெயந்தி வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் தனுஷ் படுக்கை அறையில் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பியில் பெல்ட்டினால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் தனுஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

பின்னர் சம்பவம் குறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனுஷ் தற்கொலை செய்து கொண்ட வீட்டின் அறையில் இருந்து அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், தற்கொலைக்கு முன்பு தனுஷ் தனது பெற்றோருக்கு ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை’ என்று உருக்கமாக பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. பிறகு போலீசார் செல்போனை கைப்பற்றி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பெற்றோருக்கு தனுஷ் கடைசி வீடியோ ‘நான் கிளம்புகிறேன் பாய்’

”ஹாய் மா, ஹாய் பா, ஹாய் கரண்.. இந்த வீடியோவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நான் இருப்பேனா இருக்கமாட்டேனா என்று எனக்கு தெரியாது. ஆனால் வந்து, இல்லை. நான் இருக்க மாட்டேன். கண்டிப்பாக இருக்க மாட்டேன். இது என்னுடைய நாள். இத்தனை நாட்களாக நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். என்னால படிக்க முடியும்... என்னால ஜெயிக்க முடியும்.... என்று நான் தப்பா நினைத்துவிட்டேன். என்னால எதையிலும் ஜெயிக்க முடியில... எதையும் சாதிக்கவும் முடியில. நானும் ஏதாவது செய்து பார்த்துவிடலானு தான் நினைத்தேன். ஆனால் என்னால் ஒன்றும் படிக்க முடியில. எதையும் செய்ய முடியில...என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது.

நான் தான் காரணம். முழுக்க முழுக்க நான் மட்டும் தான் காரணம். வேறு யாரும் காரணம் கிடையாது. நீங்கள் தேவையில்லாமல் நான் இறந்ததற்கு அப்புறம், அவங்க தான் காரணம், இவங்க தான் காரணம் என்று தேவையில்லாமல் கற்பனை பண்ண கூடாது. என் சாவுக்கு நான் தான் காரணம். நான் மட்டும் தான் காரணம். ஏனா எனக்கு என்ன வரும் என்று தெரியாமல் நானே எனக்குள் ஒரு பொய்யான அறிவை வளர்த்துக்கிட்டேன். அதுதான் தப்பு. எல்லாம் அம்மா தான் என்று நினைத்து அவங்களிடையே போய் விழுந்துகிட்டு இருக்க போறீங்க. அவங்க கிடையாது. வாழ்க்கையில் என்ன எதிர்காலம் எப்படி இருக்கணும் என்று தெரியாமல் ஒரு மடத்தனமாக ஆளாக நான் மாறிவிட்டேன். அதுமட்டும் இல்லாமல் என் மூளை மிகவும் குழம்பி போய் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் நான். நான் கிளம்புகிறேன் பாய். இவ்வாறு அந்த வீடியோவில் தனுஷ் பேசியுள்ளார்.

Related Stories: