கழிவு நீரை அகற்றும்போது இறந்தார் ஒப்பந்த தொழிலாளர் ரவிகுமார் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 28ம் தேதி காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்கிற கட்டாரி 26, இயந்திர துளையில் ஏதேனும் கல்/துணி அடைக்கப்பட்டிருக்கிறதா என்று சாலையில் நின்று கவனித்தபோது, இயந்திர துளையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

அவரை காப்பாற்ற முயன்ற ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமார்-35 என்பவரும் இயந்திர துளையில் விழுந்து விட்டார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒப்பந்த தொழிலாளர், நெல்சன் என்கிற கட்டாரி என்பவர் 28ம் தேதி இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர் ரவிகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். ரவிகுமார் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: