இட்லி துணியை சரியாக சுத்தம் செய்யாததால் தகராறு அம்மா உணவக ஊழியர்கள் குடுமிப்பிடி சண்டை: போலீசில் இருதரப்பும் புகார்

சென்னை: இட்லி துணியை சரியாக சுத்தம் செய்யாததால் ஏற்பட்ட தகராறில் அம்மா உணவக பொறுப்பாளர் மற்றும் ஊழியர் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி (37). இவர், சாலிகிராமம் வி.வி.கோயில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவகனத்தின் பொறுப்பாளராக ராதிகா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம் போல் கடந்த 28ம் தேதி மதியம் தாமரைச்செல்வி சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொறுப்பாளர் ராதிகா, அம்மா உணவகத்தில் பயன்படுத்தப்படும் இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தாமரைச்செல்வியிடம் கேட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மற்றும் அம்மா உணவகத்தில் சாப்பிட வந்த நபர்கள் பிரித்து விட்டு சமாதானம் செய்தனர். இதில் தாமரைச்செல்வியின் இடது காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே தாமரைச்செல்வி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினர்.

பின்னர் சம்பவம் குறித்து தாமரைச்செல்வி, அம்மா உணவக பொறுப்பாளர் ராதிகா தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். அதேபோல், ராதிகாவும், அம்மா உணவக சமையல் வேலை செய்து வரும் தாமரைச்செல்வி தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். இரண்டு புகார்களையும் போலீசார் பெற்று இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இட்லி துணியை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால் அம்மா உணவக ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் சாலிகிராமம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: