சென்னையில் உள்ள மழைநீர் கால்வாய்களில் 6000 சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு: துண்டித்து, அபராதம் விதிக்கும் பணி தீவிரம்; மாநகராட்சி பறக்கும்படை குழு நடவடிக்கை

சென்னை: சென்னையில் மாநகராட்சி பறக்கும் படை குழு நடத்திய சோதனையில், மழைநீர் வடிகால்வாய்களில் சட்ட விரோதமாக இணைக்கப்பட்டிருந்த 6000 கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை துண்டித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி கடந்த 2011ம் ஆண்டு வரை, 174 சதுர கி.மீ., பரப்பளவில், 10 மண்டலங்களை கொண்டிருந்தது. அப்போது, 155 வார்டுகள் இருந்தன.

பின்னர் திருவள்ளூர், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பேரூராட்சிகள், ஊராட்சிகளையும் இணைத்து, பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 426 சதுர கி.மீ., பரப்பளவில், 15 மண்டலங்கள், 200 வார்டுகளுடன் செயல்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாதாள சாக்கடை திட்டம் ெகாண்டு வரப்பட்டது. முறையான அனுமதி பெற்ற கட்ட உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும். உரிய அனுமதி பெறாத கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டியவர்கள் முறையான கழிவுநீர் இணைப்புகளை பெற முடியாது.

கழிவுநீர் இணைப்பு பெறாத பல வீடுகள் இன்றும் கழிவுநீரை மழைநீர் வடிகால்கள் மற்றும் திறந்த வெளியில் வெளியேற்றி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்  மாசுபடுவதோடு மட்டுமின்றி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் சட்ட விரோதமாக மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீர் இணைப்புகளை ஏற்படுத்தி அதில் கழிவுநீரை விடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நபர்கள், இரவு நேரங்களில் தங்கள் சொந்த முயற்சியிலோ அல்லது மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் ஈடுபடுபவர்கள் துணையுடனோ இதுபோன்ற சட்ட விரோத இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

பலர் திறந்தவெளியில் வெளியேற்றும் கழிவுநீரை மழைநீர் வடிகால்வாய் வழியாக செல்லும் வகையில் அதை இடித்து விடுகின்றனர். இதுபோன்ற இணைப்புகள் மற்றும் செயல்களால் மழைநீர் வடிகால்களில், மழைக்காலங்களில்  மழைநீர் செல்வது தடைபட்டு கழிவுநீர் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் வெள்ள நீர் வெளியேற முடியாமல் தெருக்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை உருவாகுகிறது. இதுபோன்ற முறைகேடுகளை கண்டறிய 25 ஆண்டுகளுக்கு முன்பு ரிப்பன் மாளிகையை தலைமையிடமாக கொண்டு, பறக்கும் படை குழு செயல்பட்டது. பல்வேறு அரசியல் தலையீடு காரணமாக நாளடைவில் இக்குழு கலைக்கப்பட்டது.

பின், அந்தந்த வார்டு பொறியாளர்களிடம் பொறுப்பு  வழங்கப்பட்டது. குழுவாக இருந்தபோது நடவடிக்கை எடுத்த நிலையில், தனி நபராக  எந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முடியாமல் பொறியாளர்கள் திணறினர். இதில், சில பொறியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் பல்வேறு வகைகளில் சமரசம் அடைந்ததால் மழைநீர் வடிகால்களில் கழிவு நீர் இணைப்பு அதிகரித்தது. இது தொடர்பான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு வரத் தொடங்கியது. இதை  கவனத்தில் கொண்டு, மேயர் பிரியா சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை  எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நிரந்தரமாக அடைக்க மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சமீபத்தில் பறக்கும் படை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி முதல் கடந்த 27ம்தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 5,725 சட்ட விரோத கழிவுநீர்  இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு,  ரூ.30,56,570 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, கடந்த 3 நாட்களில் மட்டும் பறக்கும் படை குழு நடத்திய அதிரடி சோதனையில் 94 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் என மொத்தம் கடந்த 3மாதங்களில் மட்டும் 6000 இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பறக்கும் படை குழுவினர் வார்டு வாரியாக தங்கள் அதிரடி சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எந்த பகுதிகளில் எல்லாம் சட்ட விரோத இணைப்புகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதிப்பதோடு எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். சென்னை முழுவதும் இந்த ஆய்வுகள் அனைத்து வார்டுகளிலும் நடந்து வருவதால் கூடிய விரைவில் அனைத்து சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகளும் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறையின் மூலம்  2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* நிறுவனங்களுக்கு ரூ.25000 அபராதம்

மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு ரூ.5,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டு வரும் நடைமுறையும் சென்னை மாநகராட்சியில் உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அபராத தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* பறக்கும் படைக்கு முழு அதிகாரம்

சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, பறக்கும் படை அமைக்கப்பட்டது. கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் செயல்பட, பறக்கும் படை குழுவுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. யாராவது குறுக்கீடு செய்தால், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாரத்தில் 3 நாட்கள் அதிரடி நடவடிக்கை தொடரும் என்று சென்னை மாநகராட்சி அதகிாரிகள் தெரிவித்துள்ளனர்.

* புகார் எண் 1913

மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Related Stories: