2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் எஸ்சி, எஸ்டி.க்கு எதிரான குற்றத்தில் உடனடி எப்ஐஆர்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகமாகி வருகிறது. குறிப்பாக, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

* எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் தாமதிக்காமல் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். எப்ஐஆர். பதிவு செய்யப்படுவதில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு சரியாக நகர்கிறதா என்பதை உறுதிபடுத்த அவற்றை கண்காணிக்க வேண்டும்.

* எப்ஐஆர் பதிவு செய்து 60 நாட்களுக்கு மேலான வழக்குகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டம் அல்லது மாநில அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க சிறப்பு டிஎஸ்பி.யை நியமித்து கொள்ளலாம்.

* தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் பெறப்பட்ட எஸ்சி, எஸ்டி.யினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

* சர்ச்சைக்குரிய, வன்முறை பகுதிகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் உயிரை, சொத்துகளை காப்பாற்ற போதியளவு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: