திண்டிவனம் அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்ததை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நல்முக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி(40). இவருக்கும் சக்கரபாணி என்பவருக்கும் திருமணமாகி 17 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் சக்கரபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சாந்தியை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தனியாக வசித்துவந்த சாந்திக்கும் சக்கரபாணியின் உறவினரான செல்வம்(45), என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கள்ளத்தொடர்பால் சாந்திக்கு கடந்த 21ம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவம் முடித்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து சாந்தி வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து நேற்று காலை குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கிராம செவிலியர் சென்று குழந்தை எங்கே என்று கேட்டபோது, குழந்தை இறந்துவிட்டது என சாந்தி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

உடனடியாக செவிலியர் கிராம நிர்வாக அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை இறந்துவிட்டதாகவும், அந்த குழந்தையின் உடலை வடகொளப்பாக்கம் வயல்வெளி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டதாகவும் சாந்தி கூறினார்.

இதனையடுத்து போலீசார் வடகொளப்பாக்கம் கிராமத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தை இயற்கை மரணம் அடைந்ததா? அல்லது தகாத உறவினால் பிறந்த குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: