ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை; பாஜக கூட்டணி வேட்பாளர், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மனு ஏற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டு உள்ளார். அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை களமிறக்கி உள்ளன. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன.

இவர் கடந்த 27-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திரவுபதி முர்முவோ கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் இருவரும்தான் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களை தவிர மேலும் 100-க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நேற்று ஆகும். நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன.

அந்த வகையில் மராட்டியத்தை சேர்ந்த குடிசைவாசி ஒருவர், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பெயரை கொண்ட ஒருவர், டெல்லியை சேர்ந்த பேராசிரியர், தமிழகத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் என பல்வேறு தரப்பினரும் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட 115 வேட்பு மனுக்களில் 28 வேட்புமனுகள் ஆரம்பதியிலேயே நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 87 வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக. 6ல் துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூலை 22-ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் மாநிலங்களவை எம்பி.க்கள் 233, மக்களவை எம்பி.க்கள் 543, 2 அவைகளிலும் உள்ள மொத்த நியமன எம்பி.க்கள் 14 பேர் வாக்களிக்க உள்ளனர்.

Related Stories: