4 இடங்களில் இஸ்லாமியர்கள் திடீர் மறியல்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் இன்று 4 இடங்களில் இஸ்லாமியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் புதிதாக பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளிவாசல், முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் விதத்தில் முதல் கட்டமாக பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை துண்டிக்க முடிவு செய்த மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் பள்ளிவாசலுக்கு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஏராளமானோர் திரண்டு அனுப்பர்பாளையம்புதூர் பகுதியில் திடீர் மறியலில் ஈடுட்டனர். அனுப்பர்பாளையம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர்.

இதுபோல் திருப்பூர் காங்கயம் ரோட்டில் மறியல் செய்த மனியநேய மக்கள் கட்சியினர், இஸ்லாமியர்கள் அங்கிருந்து கிளம்பி மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தெற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். தொடர்ந்து சிடிசி கார்னர், மங்கலம் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. திருப்பூரில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: