விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு காரணமாக போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணி: மயிலாடுதுறை அருகே பரபரப்பு

குத்தாலம்: மயிலாடுதுறை அருகே போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணி நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேலபருத்திக்குடியில் 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு நேரடி நெல் விதைப்பு முறையில் விவசாய பணிகள் துவங்கப்பட்டது. இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு நேரடி நெல் விதைப்பு முறையால் நாற்று பறித்தல், நடவு செய்தல் போன்ற வேலைகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்தனர். இதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில் மேலபருத்திக்குடி கிருஷ்ணமூர்த்தி என்பவரது வயலில் ஏடிஎஸ்பிக்கள் தங்கவேல், சுவாமிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணி கடந்த 27ம் தேதி நடந்தது. இதையறிந்த விவசாய தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் வயலுக்கு சென்று நேரடி நெல் விதைப்பு பணியை தடுத்தனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் மேலபருத்திக்குடியில் 7 விவசாயிகள் 13 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு பணியில் இன்று ஈடுபடப்போவதாக அறிவித்தனர். நேரடி நெல் விதைப்புக்கு விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பிரச்னை செய்துவிடக் கூடாது என்பதற்காக மேலபருத்திக்குடி, கீழபருத்திக்குடியில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆர்டிஓ யுரேகா நேற்றிரவு உத்தரவிட்டார்.

இதனால் 2 கிராமத்திலும் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். குத்தாலம் தாசில்தார் கோமதி, மண்டல துணை தாசில்தார் சுந்தர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு நேரடி நெல் விதைப்பை பார்வையிட்டனர்.

Related Stories: