ம.பி.யில் 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் திபேந்திரயாதவ். இவன் நேற்று மதியம் அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அதே பகுதியில் உள்ள 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பல மணி நேரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்தான்.

இதற்கிடையில், விளையாடிய சிறுவனை காணவில்லையே என்று அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். அப்போதுதான் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தெரிந்து. உடனே போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், ஊர் காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் விளக்குகள் கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து, ஆழ்துளை கிணற்றின் அருகே ஒரு சுரங்கப்பாதை அமைத்து சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த நேரத்தில் லேசாக மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் மீட்பு குழுவினர் பணியை தீவிரப்படுத்தினர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். இதையடுத்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிம்மதியடைந்தனர். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீடியோ கால் மூலம் சிறுவனுடன் உரையாடினார்.

Related Stories: