×

என்ன செய்வது தோழி? அம்மாவின் காதலால்…

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் தோழிக்கு,

எனக்கு வயது 23. திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. என் கணவர் பாதுகாப்பு துறையில் வேலை செய்வதால் வெளிமாநிலத்தில் அவருடன் வசிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் போதே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருமணம் ச்ச்ச்ந்செய்தார்கள். காரணம் என் காதல். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் போது, எனது பக்கத்து வீட்டுக்காரர் மகன் என்னை விரும்புவதாக சொன்னார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார். பக்கத்துபக்கத்து வீடு என்பதால் சிறு வயது முதல் பழக்கம்.

ஒன்றாக விளையாடி இருக்கிறோம். இரு குடும்பங்களும் ஒன்றாக கோவில், நிகழ்ச்சிகளுக்கு, சுற்றுப்பயணங்களுக்கு போவது வழக்கம். எனது தோழிகள் கூட அவரிடம் நான் பேசுவதை பார்த்தால் ‘உன்னோட ஆளா’ என்று கேட்டு கிண்டல் செய்வார்கள். ஏனோ நான் அதை மறுத்து பேசியதில்லைஅதனால் அவர் மீது எனக்கு ஈர்ப்பு மட்டுமல்ல, நல்ல எண்ணமும் உண்டு. அதனால் ‘தன் விருப்பத்தை’ அவர் சொன்னபோது என்னால் மறுத்து சொல்ல முடியவில்லை. அதன்பிறகு அடிக்கடி பேசுவோம். நாங்கள் வழக்கமாக பேசி அரட்டை அடிப்போம் என்பதால் எங்கள் வீடுகளில் சந்தேகம் வரவில்லை.

அவர் படிக்கும் அதே நகரத்தில் நானும் அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்தேன். தினமும் ரயிலில் நாங்கள் ஒன்றாக சென்று வருவோம். அவரது வாகனத்தில் தான் ரயில்நிலையம் வரை போவேன். எனது அப்பா என்னை அழைத்து செல்வதாக சொன்னாலும், என் அம்மா, ‘நம்ம தம்பிதான் கூட போ’ என்று சொல்வார். கல்லூரி நாட்களில் சினிமா, ஓட்டல் என்று சுற்றினோம். விடுமுறை நாட்களிலும் ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என்றுச் சொல்லி கடற்கரை, கோவில் என்று போய் வருவோம். இரண்டு குடும்பங்களுக்கு இருந்த ஒற்றுமை, உறவு காரணமாக எங்கள் காதலுக்கு சாதியும், மொழியும் தடையாக இருக்காது என்று நம்பினோம்.

ஆனால் திடீரென ஒருநாள், அவருடன் நான் ‘பைக்கில் போகக்கூடாது’ன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதிலிருந்த அப்பாதான் தினமும் என்னை ரயில்நிலையம் அழைத்து சென்று வருவார். அதேபோல் அவருடன் பேசிக் கொண்டிருந்தால் உடனே கூப்பிட்டு ‘ஏதாவது’ வேலை சொல்வார். அவரிடம் பேசவே விடுவதில்லை.

என் அம்மாவின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் புரியவில்லை. ஆனால் அவரோ, ‘நம்ம விஷயம் உங்க அம்மாவுக்கு தெரியும் போல’ என்று கூறினார். என்னிடம் அம்மா ஏதும் காட்டிக் கொள்ளவில்லை. எங்கள் காதலை யாரோ என் அம்மாவிடம் சொன்னதுதான் காரணம் என்பது பிறகு தெரிந்தது. என் அம்மாவின் தடையை மீறி எங்கள் காதல் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருந்தது. அது எங்கள் தெருவில் உள்ளவர்களுக்கும் தெரிந்து விட்டது. அவர்களில் சிலர் என் அம்மாவிடம் நேரடியாக விசாரிக்க தொடங்கிவிட்டனர்.

அதனால் ஆத்திரமடைந்த எனது அம்மா, என்னை ‘கல்லூரிக்கு போக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். ‘நான் எப்பவும் உன் நல்லதுக்குதான் சொல்வேன். அவங்க வேற சாதி மட்டுமல்ல, வேற மொழிக்காரங்க... நமக்கு ஒத்து வராது’ என்றார். நான் அழுது அடம் பிடித்தும் ஒப்புக் கொள்ளவில்லை. விவரம் தெரிந்த அப்பா, ‘காதலிக்க வேணாம்ன்னு சொல்லு.... ஆனா படிக்க வேணாம்ன்னு சொல்லாதே’ என்று பல முறை எடுத்துச் சொன்னார். ஆனால் அப்பாவின் சொல் எப்போதும் அம்மாவிடம்  எடுபட்டதில்லை.

என் காதலர், ‘எங்கள் காதலை’ அவரது வீட்டில் சொல்லியுள்ளார். முதலில் முரண்டு பிடித்துள்ளனர்.  என் காதலரின் அடம் காரணமாக ஒப்புக் கொண்டவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து ‘பெண்’ கேட்டனர். அதற்கு அம்மா, ‘உங்களுக்கும் எங்களுக்கும் நல்ல உறவு இருக்கு. அது எப்பவும் தொடரணும்னு நெனக்கிறேன். அதனால் இந்த விஷயத்தை மறந்துட்டு வாங்க... பேசுங்க.... இல்லனா வராதீங்க’ என்று நறுக்கென சொல்லிவிட்டார்.

அதன் பிறகு அவர்கள் எங்களுடன் பேசுவதில்லை. கூடவே தங்கள் மகனையும் என்னுடன் பேசவிடாமல் செய்துவிட்டனர். செல்போனில் கூட பேசிக் கொள்ள முடியவில்லை. அம்மா என்னை பக்கத்து மாநிலத்தில் இருக்கும் மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

அங்கு போன சில நாட்களில் அவ்வப்போது சிலர் வந்து என்னை பெண் பார்த்து விட்டு போவர்கள். எப்படியிருந்தாலும் என் காதலர் என்னை வந்து மீட்டுச் செல்வார் என்று நம்பியிருந்தேன். அவர் வரவில்லை. அதே நேரத்தில் வந்து போன மாப்பிள்ளைகளில் ஒருவர் ‘ஓகே’ சொல்லியதால், எனக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாகின. அம்மாவிடம் பேசியபோது, ‘நீ ஏதாவது செய்தால், நான், அப்பா, தம்பி எல்லோரும் செத்துப் போய்டுவோம்’ என்று மிரட்டினார். கூடவே, ‘நீ முக்கியம்ன்னு நெனச்சிருந்தா எங்கிருந்தாலும் உன்ன தேடி வந்திருப்பான். அவன் வரலன்னுதும் நீ புரிஞ்சுக்கணும்’ என்று ‘அட்வைஸ்’ செய்தார்.

ஒரு கட்டத்தில் அம்மா சொல்வதை ஏற்றுக் கொண்டேன்். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தேன். அவரை பார்க்க முடியவில்லை. அதன் பிறகு திருமணமாகி நான் கணவருடன், அவர் வேலை செய்யும் மாநிலத்திற்கு சென்று விட்டேன். குடும்ப நிகழ்ச்சிகள், விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கு வந்து செல்வோம்.

சில நாட்களுக்கு முன்பு அம்மா போன் செய்து, ‘பக்கத்து வீ்ட்டுக்காரங்க நம்ப தம்பியை கடத்திட்டாங்க. பிரச்னை பெரிசாயிடுச்சி.. உடனே வாங்க’ என்று அழைத்தார். ‘பக்கத்து வீட்டுக்காரர்கள்’ என்றதும் நான் தயங்கினேன். என் வீட்டுக்காரர் கட்டாயப்படுத்த உடனே கிளம்பி சென்றோம். அம்மா சொன்ன பக்கத்து வீடு, இன்னொரு பக்கத்து வீடு என்பதும், அவர்கள் பெண்ணை, என் தம்பி காதலித்ததும், அழைத்துக் கொண்டு ஓடி விட்டதும் தெரிந்தது.

அம்மாவோ, அந்த குடும்பத்தை கொச்சையான, கேவலமான வார்த்தைகளில் திட்டியதுடன், ‘நம்ம தம்பியை மயக்கி கூட்டிட்டு போய்ட்டாங்க.... ஆனா, அவங்க பெண்ணை நம்ம பையன் ஏமாத்தி கூட்டிட்டு போய்ட்டதா போலீஸ்ல  பொய் புகார் பண்ணிட்டாங்க.... அந்த பொண்ணோட அம்மா கிட்ட ஒழுக்கமில்லை. அவள மாதிரிதானே அந்த பொண்ணும் இருப்பா.. அதனாலதான் அவ வேணாம்ன்னு சொல்றேன்... மாப்பிள்ளை நீங்க, பெரிய எடத்துல வேலை செய்றீங்க நீங்கதான் கூட இருந்து போலீஸ்ல பேசுணும்’ என்று சொன்னார்.

அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்பதில் அம்மா தீவிரமாக இருந்தார். என் காதலுக்கு தடையாக இருந்த மொழியும், சாதியும்தான் என் தம்பி காதலுக்கும் தடையாக இருக்கிறது என்று புரிந்தது. ஆனால் அந்த சாதியும், மொழியும் எங்க அம்மாவுக்கு தடையாகவில்லை.

ஆம்... நான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத என் காதலோ, என் தம்பியின் காதலோ காரணமில்லை. என் அம்மாவின் காதல்தான்.... அதுவும் பொருந்தா காதல்..... அதுதான் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆம்  தன்னை விட 20 வயது குறைந்தவருடன் அவர் தொடர்பில் இருப்பதாக ஊரில் பேசிய போது என்னால் நம்ப முடியவில்லை. எப்போதும் தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்ளும் அவர் எப்படி தவறு செய்வார் என்றுதான் தோன்றியது.

எங்கள் காதல் விவகாரங்களில் கோபமான யாரோ கதை கட்டி விட்டிருப்பார்கள் என்று கூட நினைத்தேன். ஆனால் நானே பார்க்கும் வரை அப்படிதான் நம்பினேன். நாங்கள் ஊருக்கு வந்து ஒரு வாரம் கழித்துதான் அந்த அதிர்ச்சிகரமான விஷயம் உண்மை என்று தெரிந்து கொண்டேன்.

என் காதலை விவரித்து எழுதியது போல் என் அம்மாவின் காதலை விவரிக்க முடியவில்லை. என் காதலன்தான் என் அம்மாவின்...... அதை முழுமையாக எழுதக் கூட முடியவில்லை. அவர்களுக்குள் எவ்வளவு நாட்களாக தொடர்பு என்று தெரியவில்லை. அவர்களுக்குள் இருந்த தொடர்பால்தான் என் காதலை அம்மா ஏற்கவில்லையோ என்று கூட யோசிக்கிறேன்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊருக்கே தெரிந்த விவகாரம் என் அப்பாவுக்கு எப்படி தெரியாமல் இருக்கிறது என்றும் புரியவில்லை. அவருக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? யோசிக்க கூட முடியவில்லை. அதை விட என் கணவருக்கு, அவரது வீட்டுக்கு தெரிந்தால்... என் வாழ்க்கை என்னவாகுமோ என்று பயமாக உள்ளது. இந்த பிரச்னையை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை. என் அம்மாவுக்கு நான் புத்தி சொல்ல முடியுமா? சொன்னால் அவர் கேட்பாரா? என்று ஏராளமான கேள்விகள் என்னை வாட்டுகின்றன?

கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்றால், எப்போதும் அந்த விவகாரத்தை பற்றியே யோசித்துக் கொண்டு இருக்கிறேன். தூங்க முடியவில்லை. ஊருக்கு போய்விடலாம் என்று கணவரை அழைத்தால் அவரோ, ‘இங்க பிரச்னை இருக்கும்போது எப்படி போவது’ என்று அடம் பிடிக்கிறார். என்ன செய்வதுன்னு புரியவில்லை. இந்த பிரச்னையை எப்படி கையாளுவது என்று நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் தோழி... நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி

நட்புடன் தோழிக்கு,

தங்களின் கடிதம் கண்டேன் தோழி. தங்களின் நிலைமை புரிகிறது. பொதுவாக அம்மாவைப் பற்றிய ஒரு பிம்பம் இருக்கும். அவர்கள் நல்லவர்கள் அன்பானவர்கள். பாசமானவர்கள். தவறு ஏதும் செய்ய மாட்டார்கள் என்று... அதற்கு விதிவிலக்கும் உண்டு. உங்கள் காதலை உங்கள் தாயார் ஏற்க மறுத்து விட்டார்கள் என்று கூறுகிறீர்கள்.. அப்பொழுது உங்கள் காதலரின் நிலைப்பாடு என்ன? அவர் ஏன் உங்களுடனும் உங்கள் அம்மாவுடனும் ஒரே நேரத்தில் பழகிக் கொண்டிருந்தார்? என எத்தனை கேள்வி எழுந்தாலும்... அதில் ஒருவரை மட்டுமே குறை கூறுவது சரியாக இருக்காது.

எது எப்படி என்றாலும் இப்படிப்பட்ட ஒருவருடன் உங்கள் வாழ்க்கை அமையவில்லை என்று நீங்கள் நிம்மதி அடையுங்கள். ஆம். நன்றாக யோசித்து பாருங்கள் இப்படி ஒருவர் உங்களுக்கு தகுதியானவரா? எனவே நீங்கள் இப்போதுள்ள வாழ்க்கையை நேசித்து வாழுங்கள். உங்கள் அம்மா மற்றும் உங்கள் முன்னாள் காதலரின் உறவுமுறையை நினைத்து உங்களை மிகவும் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த அம்மாவின் பிம்பம் உடையும் பொழுது சிறிது வலி ஏற்படத்தான் செய்யும்.

சிந்தித்து பாருங்கள். நமக்கு கணவர், குழந்தைகள் இருக்கும் போது... நாம் இன்னொரு உறவில் ஈடுபட்டால்.... அது அவர்களுக்கு தெரிய வந்தால்.... அவர்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அதையெல்லாம் உங்கள் அம்மா யோசித்திருக்க மாட்டார்களா? இருப்பினும் அவர் அந்த உறவில் சிக்கியுள்ளார். கணவன், மனைவி உறவில் மூன்றாவது ஆள் வரும்போது, அது சார்ந்த பிரச்சனைகளை கணவன், மனைவி மட்டுமே தீர்மானிக்க இயலும். மகளாக உங்கள் பெற்றோரின் திருமண வாழ்க்கையை பற்றி உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

நீங்கள் கல்யாணம் ஆகாமல் இருந்தால் கூட, அது உங்களை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதால், நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். மன உளைச்சல் அடைய வேண்டாம். அது பற்றி மட்டுமே என்னால் கூற இயலும். இந்த விஷயத்தில் உங்கள் அப்பாவிடம் சொல்லலாமா, உங்கள் அம்மாவிடம் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி ஏதேனும் முடிவு செய்யலாமா, உங்கள் கணவரிடம் இது பற்றி விவாதிக்கலாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அப்படி செய்வதால் ஏற்படும் சாதக பாதகங்களை யோசித்து முடிவெடுங்கள். எப்படி அணுகினால், உங்களுக்கு மனதளவில் வசதியாக இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். மனநல மருத்துவராக நான் கூற விரும்புவது, தெரிந்தோ தெரியாமலோ உங்கள் அம்மா ஒரு மோசமான ஆளிடமிருந்து உங்களை காப்பாற்றியுள்ளார். உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அம்மா என்ற சினிமாதன பிம்பத்தை உடைத்து... அம்மா என்றாலும்... வயதானாலும் இதைச் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று உங்கள் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களை விரும்பவோ வெறுக்கவோ உங்களுக்கு உரிமை உள்ளது. என்ன செய்யலாம் என்று நீங்களே முடிவு எடுங்கள். வாழ்க்கையில் சில எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் பொழுது ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொண்டு கடந்து போகத்தான் வேண்டும். எனவே நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். அறிவுப்பூர்வமாக சிந்தித்து என்ன செய்யலாம் என்று முடிவெடுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!