உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகள் ரூ. 1,000 உதவி தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகள் ரூ. 1,000 உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு  இன்றுடன் முடிவடைகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக, உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,668.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில், உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இதைக் கருத்தில்கொண்டு, `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம், `மாணவிகள் உயர் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்தவகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ரூபாய் பெறும் கல்லூரி மாணவிகள் அனைவரும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும். அதன்பிறகு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு என கல்லூரிப் படிப்பை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும், இந்த மாணவிகள் ஏற்கெனவே மற்ற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்தத் திட்டத்தின்கீழ் பலன் பெறலாம் எனவும், இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும், இதற்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கு கடந்த ஜூன் 25ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதுவரை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைகிறது.

Related Stories: