தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை, சிஏ படிப்பதே தங்களின் லட்சியம்; தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் உறுதி

திருமலை: தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிஏ படிப்பதே எங்களின் லட்சியம் என தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பீரிஷெட்டிகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 2002ம் ஆண்டு 2பெண் குழந்தைகள் தலை ஒட்டி பிறந்தன. ஆனால் இவர்களை பராமரிக்க பொருளாதார வசதி இல்லை எனக்கூறி அவர்களின் பெற்றோர் மருத்துவமனையிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு வீணா, வாணி என்று பெயர் சூட்டிய டாக்டர்கள், ஐதராபாத்தில் உள்ள நிலூபர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர்களை பிரிக்க சுமார் ரூ.10 கோடி செலவாகும் என்றாலும் அவர்களை பிரிப்பது மிகவும் சிக்கலானது. அவர்களது மண்டை ஓடுகளால் இணைக்கப்பட்ட கிரானியோபகஸ் இரட்டையர்கள். தனித்தனி மூளையைக் கொண்டுள்ளனர். இதனால் தனித்தனி சிந்தனை செயல்திறன் கொண்டவர்கள் என்று மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தில் வசிக்கும் வீணா-வாணி அரசு சார்பில் படித்து வருகின்றனர்.

மேலும் இவர்களை பராமரிக்கும் வகையில் அவர்களின் தாய்க்கு  அதே காப்பகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்பில் படு சுட்டியான இருவரும் பொருளாதாரம், வணிகவியல், அரசியல், அறிவியல் ஆகியவற்றை முதன்மை பாடமாக எடுத்து படித்தனர். சமீபத்தில் நடந்த இன்டர்மீடியட் 2ம் ஆண்டு (12ம் வகுப்பு) தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் இரட்டையர்கள் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். வாணி 712 மதிப்பெண்களும், வீணா 707 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தெலங்கானா அரசுக்கு நன்றி. எங்கள் லட்சியம் பட்டய கணக்காளர் சி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான். பட்டயக் கணக்காளர்களாக ஆவதற்கு தேவையான கல்வியை எடுத்து படிப்பில் சேருவோம்’ என்றனர். இவர்களுக்கு அம்மாநில அமைச்சர்கள் சத்யவதி ரத்தோட், சபீதா இந்திரா ரெட்டி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருவதாக உறுதியளித்தனர்.

Related Stories: