கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற தாய் கைது!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த அத்திப்படுகையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(53). இவர் அதே பகுதியில் உள்ள தனது வயலில் பருத்தி பயிரிட்டிருந்தார். வடக்குத்தெரு சுடுகாட்டுக்கு அருகே உள்ள தனது நிலத்தை பார்வையிட்டு விட்டு வீட்டுக்கு நேற்று நடந்து வந்தார். அப்போது வடக்குவீரன் குளத்து வாய்க்கால் மதகில் துர்நாற்றத்துடன் குழந்தை சடலம் கிடந்ததை பார்த்தார். இதுகுறித்து சத்தியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிந்து, அத்திப்படுகையை சேர்ந்த கண்ணன் மனைவி ரேணுகாவை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில் அதே ஊரை சேர்ந்த ஒருவருடன் தகாத உறவால் கர்ப்பமானதும், வெளியில் தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்று நினைத்து பிரசவ வலியோடு சுடுகாடு வரை நடந்து சென்று அங்கு பிரசவித்ததும், பிறந்த பெண் குழந்தை நீண்ட நேரம் அழாததால் குழந்தை இறந்திருக்கும் என்று நினைத்து தொப்புள் கொடியை ரேணுகாவே கத்தரித்ததும், பின்னர் குழந்தையை வாய்க்காலில் வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து ரேணுகாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேணுகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories: