ஊராட்சி தலைவர் தகுதி நீக்கம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தொப்பம்பட்டி ஒன்றியம், புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராணி. பாஜவை சேர்ந்தவர். துணை தலைவராக மஞ்சுளாதேவி உள்ளார். தவிர, 11 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி தலைவர் செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன் ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும், நலத்திட்ட பணிகள் எதுவும் செய்ய விடுவதில்லை எனவும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி தலைவரான செல்வராணியின் காசோலை அதிகாரம் மாவட்ட நிர்வாகத்தால் பறிக்கப்பட்டது.

மேலும், ஊராட்சி தலைவரை தகுதிநீக்கம் செய்ய கூறி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டரிடம் முறையீடு செய்திருந்தனர். இதன்படி கடந்த வாரம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் வார்டு உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கலெக்டரிடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் கலெக்டர் விசாகன் புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராணியை தகுதிநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் செல்வராணியின் வீட்டின் முன்பு வருவாய்த்துறையினரால் ஒட்டப்பட்டது.

Related Stories: