திருத்தங்கல்லில் மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

சிவகாசி: திருத்தங்கல்லில் சேதமடைந்துள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கல் மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் விருதுநகர் சாலையில் உள்ளது. திருத்தங்கல் பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள இந்த கட்டிடத்தின் மாடியில் 12 கடைகள், கீழ் தளத்தில் 12 கடைகள் என இயங்கி வருகின்றன. ஒவ்வொறு கடைகளும் 9 வருட குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த கடைகள் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதால் சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தின் பல பகுதிகள் கான்கிரீட் வெளியே தெரிகிறது.

குறிப்பாக மாடியில் உள்ள பெரும்பாலான கடைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் கடைக்கு நடந்து செல்ல வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் நூலாம்படைகள் அதிகம் நிறைந்து அருவருப்பாக காட்சியளிக்கின்றன. தரைதளம், மாடிப்படிகளில் குப்பைகள், குவாட்டர் பாட்டிகள் நிறைந்து காணப்படுகின்றன. நடைபாதையில் மண் குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. இதேநிலை தொடர்ந்தால் கட்டிடம் முற்றிலும் சேதமடையும் சூழ்நிலை உள்ளது. எனவே கட்டிடம் பராமரிப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் அல்லது கடை உரிமையாளர்கள் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும், மாநகராட்சி வணிக வளாகத்தை தனியார் கட்டிடத்திற்கு இணையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: