திருச்சென்னம்பூண்டி சாலையோரம் கிடக்கும் மெகா மரத்துண்டு: அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி: திருச்சென்னம்பூண்டி சாலையோரம் கிடக்கும் மெகா மரத்துண்டை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பழமையான மரங்களும் வெட்டப்பட்டு அந்த மரங்களை ஏலம் எடுத்தவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சென்னம்பூண்டி சாலை ஓரத்தில் பல மாதங்களாக கிடக்கும் வெட்டப்பட்ட மரத்துண்டை ஏலம் எடுத்தவர்கள் எடுக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மரத்துண்டின் அடிபாகத்தில் சிகப்பு நிற துணியினாலான கொடி கட்டப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் ஆபத்தின்றி செல்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் பயணிப்போருக்கு சிவப்புக் கொடி தெரியாது. மரத்துண்டு அந்த இடத்தில் கிடப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த மரத்துண்டை ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக எடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: