தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது : ஐகோர்ட் அதிரடி

மதுரை : தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது. முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்றவர்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும்.மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும். வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது,என்றார்.

Related Stories: