மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பாஜக தலைமையிலான புதிய கூட்டணி அரசு நாளை பதவியேற்க உள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார்.மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், இவருடைய அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்படி அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். சிவசேனா கட்சியில் மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் 30க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ளனர். இந்த நிலையில் திடீரென மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அம்மாநில ஆளுநர் கோய்ஷாரி நேற்று உத்தரவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி ஆளுநர் கோஷ்யாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது உருக்கமான உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நள்ளிரவில் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

உத்தவ் தாக்கரேயின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரே முதல்வராக தொடருமாறு ஆளுநர் மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது. உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடியது பாஜக. மேலும் புதிய ஆட்சி அமைக்க இன்று ஆளுநரை சந்தித்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க கூடும் என தெரிகிறது.  அதே போல் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும் 12 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: