லயன் அபார பந்துவீச்சு 212 ரன்னில் சுருண்டது இலங்கை

காலே: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. நாதன் லயன் - மிட்செல் ஸ்வெப்சன் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி, 59 ஓவரில் 212 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. டிக்வெல்லா அதிகபட்சமாக 58 ரன் எடுத்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் 39, கேப்டன் கருணரத்னே 28, பதும் நிசங்கா 23, ரமேஷ் மெண்டிஸ் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.ஆஸ்திரேலிய பந்துவீச்சில் லயன் 25 ஓவரில் 2 மெய்டன் உள்பட 90 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளினார். ஸ்வெப்சன் 3, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்துள்ளது. வார்னர் 25, லாபுஷேன் 13, ஸ்மித் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர்.உஸ்மான் கவாஜா 47 ரன், டிராவிஸ் ஹெட் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: