பி.வி.சிந்து முன்னேற்றம்

கோலாலம்பூர்: மலேசியா ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்குடன் (10வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-13, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 11-21, 17-21 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் பாருபள்ளி காஷ்யப் 21-12, 21-17 என்ற நேர் செட்களில் கொரியாவின் ஹியோ க்வாங்கை வீழ்த்தினார். அவர் அடுத்த சுற்றில் தாய்லாந்தின் குன்லாவுட் விதித்சர்னை சந்திக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா இணை 15-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் - செலினா ஜோடியிடம் 52 நிமிடம் போராடி தோல்வியைத் தழுவியது.

Related Stories: