விருதுகளை அள்ளிய ஹூடா

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய இந்திய வீரர் தீபக் ஹூடா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.மலாஹைட், தி வில்லேஜ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன் சேர்த்தது. சாம்சன் 77 ரன் (42 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ஹூடா 104 ரன் (57 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். கார்த்திக், அக்சர், ஹர்ஷல் தொடர்ச்சியாக ‘கோல்டன் டக் அவுட்’ ஆனது குறிப்பிடத்தக்கது.அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டர்லிங் - கேப்டன் பால்பிர்னி ஜோடி 5.4 ஓவரில் 72 ரன் சேர்த்து மிரட்டலான தொடக்கத்தை கொடுத்தது. ஸ்டர்லிங் 40 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பால்பிர்னி 60 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, ஹாரி டெக்டர் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் டாக்ரெல் - மார்க் அடேர் இணைந்து போராட, ஆட்டம் கடைசி பந்து வரை பரபரப்பாக அமைந்தது. அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்து வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது. டாக்ரெல் 34 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மார்க் அடேர் 23 ரன்னுடன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. தீபக் ஹூடா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

Related Stories: