பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர்: பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலையை சீரமைக்க வேண்டுமென,  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஓஎம்ஆர் சாலை மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன்காரணமாக, மாமல்லபுரம் சாலை, அய்யம்பேட்டை தெரு, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகிய தார் சாலைகள் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. மேலும், சாலை முழுவதும் தூசி மண்டலமாக மாறியது. இதனால், வாகனயோட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினர் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் ஆகியோருடன் ஆய்வு செய்து பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்து ஒப்படைப்பு செய்ததும் புதிய சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் முடிவடைந்து ஓஎம்ஆர் சாலை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 26ம் தேதி இள்ளலூர் சந்திப்பு அருகில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலை அமைத்து 2 நாட்களுக்குள் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது. பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல் அப்படியே தாரை கொட்டி சாலை அமைத்து விட்டதாக ஒப்பந்ததாரர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் திருப்போரூர் பகுதியில் புதியதாக போடப்பட்ட ஓஎம்ஆர் சாலையை ஆய்வு செய்து சேதமடைந்த பகுதிகளை மீண்டும் அமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: