மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்

மதுராந்தகம்: முதுகரை கிராமத்தில் சேதமடைந்துள்ள ஏரியின் உபரிநீர் தடுப்பணையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் சிறுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது முதுகரை கிராமம். இங்கு, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியால், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மழைக்காலங்களில் ஏரி முழுமையாக நிரம்பும்போது கிராமமக்கள் பாதுகாப்பு நலன் கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரி நீரை தேக்குவதற்காக ஏரி பகுதி அருகே, கடந்த 6 வருடங்களுக்கு முன் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் உபரிநீர் வீணாவது தடுக்கப்பட்டு அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. மேலும், அப்பகுதியை சுற்றியுள்ள குடிநீர் கிணறுகளில் நீர்மட்டமும் உயர்ந்து, பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாய் விளங்கியது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை சேதமடைந்தது. இதனால், மழையின்போது வெளியேறும் உபரிநீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும், ஏரியிலிருந்து தடுப்பணைக்கு செல்லும் கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் செடி, கொடிகள் புதர்போல் மண்டி உள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்யமுடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, அப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது. எனவே, பரவ மழை துவங்குவதற்கு முன்பாக பழுதாகி உள்ள தடுப்பணை மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாயில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: