வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணத்தை மர்ம கும்பல் பறித்து சென்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கொல்திப் (27). இவர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாஞ்சாலப்பட்டு பகுதியில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கொல்திப்புடன் குடியிருக்கும் சக நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று இருந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு இவர் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, நள்ளிரவு ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் நுழைந்து கொல்திப்பிடம் பணம், செல்போன் கேட்டு மிரட்டினர்.

கொல்திப் தர மறுக்கவே இரும்பு ராடுகளில் முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கி விட்டு அறையில் இருந்த ரூ30 ஆயிரம் பணம், ரூ20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை இரவு பணி முடித்து வந்த சக நண்பர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

Related Stories: