சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியம் சூனாம்பேடு ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கழிப்பறை பழுதடைந்துள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இயற்கை உபாதை செல்ல இடமின்றி அவதிப்பட்டு வந்தனர். எனவே, இப்பள்ளியில் புதிய கழிவறை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து அறிந்த சோனா கம்ஸ்டார் எனும் தனியார் நிறுவனம் அவர்களாக முன்வந்து பள்ளி வளாகத்தில் சுமார் ரூ 15 லட்சம் மதிப்பில் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக நவீன கழிப்பறையை கட்டிக் கொடுத்தனர். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தனியாக நவீன கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கழிவறை கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை தாங்க  தனியார் நிறுவனத்தின் துணை தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கலந்துகொண்டு கழிப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Related Stories: