×

இசிஆர் சாலையில் பட்டிபுலம் - திருவிடந்தை வரை 8 கிமீ துரத்திற்கு புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: தினகரன் செய்தி எதிரொலியால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணியில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்திலிருந்து திருவிடந்தை பகுதி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியனில் இரவை பகலாக்கும் வகையில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. அந்த மின்விளக்குகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை பிரகாசமாக எரிந்தது. இதனால், இரவு நேரத்தில், அங்கு செல்லும் கனரக வாகனங்கள் முதல் சிறிய வாகன ஓட்டிகள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி வாகனங்களை ஓட்டி வந்ததால், அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கினர். மேலும், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துகளும் அதிகரித்து வந்தது. மேற்கண்ட, பகுதிகளில் இருந்து வேலைக்கு சென்று இரவு நேரங்களில் திரும்பி வரும்போது, இருள் சூழ்ந்த இந்த பகுதியை கடந்து ஊருக்குள் செல்ல வேண்டி உள்ளது. இதனை பயன்படுத்தி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி, கற்பழிப்பு, சங்கிலி பறிப்பு சம்பவத்தில் மர்ம வாலிபர்கள் ஈடுபட்டு வந்தனர். மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் ஒரு வித அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து மாமல்லபுரம் நகருக்குள் சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. இது குறித்து, தினகரன் நாளிதழில் கடந்த 22ம் தேதி படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். பின்னர், ஊழியர்கள் மூலம் எரியாத பழைய மின் விளக்குகளை அப்புறப்படுத்திவிட்டு,  புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணியை துவங்கினர். இதனால், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்கள் மகிழ்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.Tags : Pattipulam - Thiruvidanthapuram ,ECR , Intensity of work on fitting new electric lights for 8 km stretch from Pattipulam to Thiruvidanthapuram on ECR road: Public, motorists happy
× RELATED மரக்காணம் அருகே இசிஆர் சாலையில் பைக்...