கொரோனா முடக்கம் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா   வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் விளைவுகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபட்டவையாக இருந்தது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கனடிய ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், சமூக விலகல் எனும் கட்டுப்பாடு காரணமாகவே பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தூக்கம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் அதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (Researchers at the University of Calgary), ஹாட்ச்கிஸ் பிரைன் நிறுவனம் (Hotchkiss Brain Institute) இணைந்து, ஊரடங்கு போடப்பட்ட மாதங்களில் ஆண்கள் மற்றும் பெண்களின் தூக்கம், மனநிலை மற்றும் மனநலக் கோளாறுகள் ஆகியவற்றை கணக்கிட்டனர். குறிப்பாக பாலின வேறுபாடுகளை ஆராய்ந்தனர். கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை சராசரியாக 25.9 வயதுடைய 573 கனடியர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அதில் 112 ஆண்கள் மற்றும் 459 பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆய்வில் பங்கேற்ற 573 பேரிடமும் ஒரு ஆன்லைன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் ஃபிரன்டியர்ஸ் இதழில் குளோபல் உமன்ஸ் ஹெல்த் (Frontiers in Global Women’s Health) என்ற பிரிவில் வெளியிடப்பட்டது. கணக்கெடுப்பின் படி, பங்கேற்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் ஊரடங்கின் போது தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 39%-க்கும் அதிகமானோருக்கு தூக்கமின்மை தொடர்பான அறிகுறிகள் அதிகரித்திருந்ததாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த மாதிரியில் பதட்டம், துன்ப உணர்வுகள் அதிகரித்தன. குறிப்பாக தூக்கம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் தொடர்பான அறிகுறிகள் பெண்களிடையே அதிகம் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்கேரி பல்கலைக்கழகத்தின் கம்மிங் ஸ்கூல் ஆஃப் மெடிசின் டாக்டர் வெரோனிகா குவாடக்னி, ‘‘பொதுவாக, பெண்கள் அதிக கவலை மற்றும் மனச்சோர்வு குறித்து தெரிவித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் அறிகுறிகள் காலப்போக்கில் மோசமடைந்து, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் அதிக நீளத்துடன் இருந்தன.

ஆரம்ப காலத்தில் கவலை, மனச்சோர்வு, மோசமான தூக்க தரம் மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் அதிர்ச்சி ஆகியவற்றில் முற்போக்கான அதிகரிப்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் இது பெண்களுக்கு மட்டும் அதிகமாக இருந்தது” என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு பெண்களிடையே உயர்ந்த அனுதாபம் காட்டுகிறது. இது முதன்மையாக உணர்ச்சி களைப் புரிந்துகொள்வதற்கும் மற்றவர்களைக் கவனிப்பதற்கும் உள்ள திறனைப் பற்றியது என்பதைக் குறிப்பிடுகிறது. எவ்வாறாயினும், இந்த உயர்ந்த அனுதாபம் அதிக அளவு கவலை, மனச்சோர்வு மற்றும்

அதிர்ச்சியுடன் தொடர்புடையது.

இது குறித்து கணக்கெடுப்பின் இணை ஆசிரியர் டாக்டர் கியூசெப் ஐரியா, “கண்டுபிடிப்புகளால் நான் ஆச்சரியப்படவில்லை. கூடுதல் சுமையை சுமப்பவர்கள் பெண்கள். குடும்பம் மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை கவனித்துக்கொள்வது எப்போதுமே ஒரு பெண்ணிற்கு அதிக சுமையை அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொற்றுநோயைச் சமாளிக்க உதவும் இலக்கு, உளவியல் தலையீடுகளை உருவாக்குவதற்காக பாலின வேறுபாடுகளை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க விரும்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு: விவி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: